மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்: தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?
ஜேர்மனியின் வட பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து கேரேஜ் ஒன்றில் பீப்பாய்க்குள் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண்ணின் உடல் Hanover பகுதியில் வசித்து வந்த பிரான்சிஸ்கா என்பவரது உடல் என்பதும் இவர் கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து மாயமானார் என்பதும் தெரிய வந்தது. ஆனால் குறித்த பெண்மணி மாயமானது குறித்து இதுவரை எவரும் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமா விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட பெண்மணியை கொலை செய்து பீப்பாய்க்குள் அடைத்து வைத்தது அவரின் கணவர் என்பது தெரிய வந்தது.
பிரான்சிஸ்காவுக்கு குறிப்பிடத்தக்க குடும்பத்தினர் எவரும் இல்லை என்று கூறப்படுகிறது. இவர் பெண்கள் காப்பகத்தில் தனது 19 ஆம் வயது வரை வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதனிடையே இவருக்கும் குறித்த நபருக்கும் திருமணம் நிகழ்ந்துள்ளது. கணவன் மணைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கணவர் வீட்டாரின் நிர்பந்தம் காரணம் இருவரும் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே அவர் தமது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தமது கேரேஜில் இருந்த காலி எண்ணெய் பீப்பாய் ஒன்றில் அவரது உடலை வைத்து அடைத்துள்ளார்.
பின்னர் சில ஆண்டுகள் கடந்து ஜேர்மனியின் வட பகுதியில் புதிய குடியிருப்புக்கு சென்றபோதும் குறித்த பீப்பாயை தன்னுடன் எடுத்துச் செல்ல அவர் மறக்கவில்லை.
இதனிடையே நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த மாயமான விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் குறிப்பிட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட அவருக்கு, குறித்த கொலை வழக்கு தாமதமாக வெளிவந்த காரணத்தால் தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என கூறி விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சிஸ்காவுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடித்து விசாரிப்பது என்பது கடினமான விடயம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.