ஜம்மு-காஷ்மீர் மாநில மந்திரியின் மீது கடந்த மாதம் கையெறி குண்டு வீசி மூன்று பேரை கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டிரால் நகரில் மந்திரி நயீம் அக்தர் சென்ற காரின்மீது கடந்த மாதம் 21-ம் தேதி கையெறி குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
எனினும், மூன்று பேர் உயிரிழந்தனர். துணை ராணுவ வீரர்கள் 7 பேர் உள்பட 30 பேர் இச்சம்பவத்தில் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி குல்சார் டார் என்பவனை காட்டுப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்ததாக பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவன் பாகிஸ்தானில் உள்ள அந்த இயக்கத்தின் தளபதி முப்தி வாக்காஸ் என்பவனின் உத்தரவின் பேரில் மந்திரி மீது தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.