முஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனாவின் உறுப்பினர்களுக்குமிடையிலான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நவம்பரில் இடம்பெறவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பொதுபலசேனா முக்கிய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இதுவரைகாலமும் வில்பத்துவை முஸ்லிம்களே நாசப்படுத்தி வந்துள்ளதாக நினைத்த தங்களுக்கு எதிர்பார்த்த அளவில் போதிய விளக்கங்கள் கிடைத்திருக்கவில்லை எனவும் பொதுபலசேனா உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் அசாத் சாலி கூறியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஆத்தே ஞானசார பங்கேற்கவில்லை. எனினும், அடுத்து வரும் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையில், குர்ஆன் மத்ரஸாக்கள் பாடசாலைகள் உள்ளிட்ட விடயங்கள் மிகமுக்கியமாக ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகளில், முஸ்லிம் சமூகம் சார்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள், சட்டத்துறை மற்றும் தொழில்சார் நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பொதுபலசேனா சார்பில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.