முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், இந்த காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் வழங்கிய உத்தரவையும் உதாசீனம் செய்து இராணுவம் தொடர்ந்தும் இந்த காணியை விடுவிக்காமல் இருப்பது கவலையான விடயம் அத்தோடு இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கு பொய் கூறி விட்டதாகவே உணருகின்றேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களோடு இணைந்து நானும் போராடுவேன்.
புதுக்குடியிருப்பு நகரை அண்டி பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததன் பயனாக ஒருதொகுதி காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டதோடு மிகுதி காணிகள் மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலம் அடிப்படையில் இரு கட்டடங்களாக விடுவிக்கப்படும் என இராணுவத்தின் உறுதிமொழியை முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆகியோர் பொதுமக்களிடம் என் முன்னிலையில் வழங்கியிருந்தனர்.
ஆனால் அந்த கால அவகாசம் முடிந்து சில மாதங்களும் கடந்துள்ள நிலையில் இன்று என்னை இந்த காணி உரிமையாளர்கள் சந்தித்து முறையிட்டுள்ளதோடு மீண்டும் போராட போவதாக அறிவித்துள்ளனர். எனவே இந்த மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அரச அதிகாரிகள் இதுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களோ ஏதோ சாட்டு போக்குகளை சொல்லி விட்டு இடமாற்றத்தை பெற்று சென்றுவிடலாம் என்று முயற்சிக்கின்றார்கள்.
மக்களுக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் இந்த மக்களுடன் சேர்ந்து நான் மட்டக்களப்பு வரை சென்று போராட வேண்டும் என குறித்த அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.