நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதான இரு கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், அக்கட்சிகளின் தலைவர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் சரியான தீர்மானம் காணப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
இதுவரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கட்சிகளிடையே என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தீர்மானம் எடுக்கும் விடயத்தில் அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்பட்டு வருவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு நடைபெற்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்துக்குள் உள்ள பிரதான இரு கட்சிகளிடையே ஜனாதிபதி முறைமை குறித்தே ஒருமித்த தீர்மானம் காணப்படாதுள்ளதாகவும், இந்நிலையில், புதிய அரசியலமைப்பு கொண்டுவருவது சாத்தியமாகுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.