சுனாமியோ, நிலநடுக்கமோ ஜப்பானைத் தாக்குவது புதிதான செய்தியல்ல. ஆனால், அன்று 9.0 என்ற ரிக்டர் அளவில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கமோ வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 21,000 பேர். இதுதவிர, உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. பசிபிக் பெருங்கடலின் வடக்கு புகுஷிமா பகுதியில் உள்ள செனடாய் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் அன்று கடல்நீர் புகுந்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் கண்டன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கத் தொடங்கியது. உலையைக் குளிர்விக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கதிர்வீச்சின் தாக்கத்தை சிறிதளவு குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. கரும்புகை சூழ்ந்தது. அங்கு வசித்த 45,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 1986-ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில்லைத் தொடர்ந்து இரண்டாவதாக நடந்த மிகப்பெரிய அணுஉலை விபத்தாக வரலாற்றில் பதிவானது. ஆறு ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கிறது அந்த உலை. இப்போது புகுஷிமா பற்றி வெளியாகியிருக்கும் செய்தி இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.
அணு உலை விபத்து கடந்த ஆறு ஆண்டுகளைக் கடந்து சென்றாலும் உலையிலிருந்து கேசியம் – 137 எனும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பசிபிக் பெருங்கடலில் பல இடங்களில் இன்னமும் இருக்கிறது. இந்நிலையில் அணுஉலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள ஊர்களில் நிலத்தடி நீரில் அதிகமான அளவு கதிர்வீச்சு தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் கடற்கரைப்பகுதியில் எட்டு இடங்களில் ஆய்வினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள நேஷனல் அகடாமி ஆப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள், ‘பசிபிக் பெருங்கடலில் அதிகமாகக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கதிரியக்க கதிர்கள் கடலின் அடிப்பகுதிக்குள் செல்கிறது. அடிப்பகுதியில் உட்புகும் கதிர்வீச்சானது உள்ளே இருக்கும் நிலதத்தடி நீரையும் பாதிக்கிறது. இதனால் அணுஉலையிலிருந்து 100 கி.மீ தள்ளி இருக்கும் பல ஊர்களில் நிலத்தடி நீரில் கேசியம் – 137 எனும் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கிறது” எனத் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜப்பான் முன்னாள் பிரதமர், நவோடா கான், “எந்த அணுஉலையும் நாட்டுக்கு நல்லதல்ல; எந்த அணுஉலையும் பாதுகாப்பானது அல்ல” என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் அடுத்தடுத்து பத்து அணு உலைகளை நிறுவ ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜன் பேசும்போது, “பசிபிக் பெருங்கடலிலுள்ள நீரோட்டங்கள் (ocean currents), கதிர்வீச்சை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. அணுஉலைகளைப் பற்றி படிக்க அதிக ஆர்வம் கொண்ட எங்களுக்கு இந்தத் தகவல் புதிதாக இருக்கிறது. இது நாள் வரையில், கதிர்வீச்சால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, அணு உலைகளின் அருகிலிருக்கும் பகுதிகளில் மட்டும் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அணுஉலைகளிலிருந்து 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு பாதிப்பு பற்றி அறிந்துகொண்டது புதிது. இந்த தகவல்படி கல்பாக்கம் அணு உலைகளால், கல்பாக்கம் பகுதி மட்டுமல்ல, சென்னை, புதுச்சேரி, கடலூர் போன்ற மாவட்டங்களும், கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு நீரால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தெற்கு மாவட்டங்களும் பாதிக்கப்படும் என்று புரிகிறது. கூடங்குளத்தில் போராடிய மக்கள், ஒவ்வொரு முறையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கூடங்குளம் அணு உலைகளால் ராமநாதபுரம் பகுதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும், ஏன் தென்னிந்தியா முழுக்க பாதிப்புக்கு உள்ளாகும் என்று. நிலத்தடி நீர் பாதிப்பு ஒரு புதிய பரிமாணம். அவர்கள் சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது” என்றார்.