வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து அபாரமாகத் தொடங்கியுள்ளது.
கடந்த மட்டைப் பிட்சில் தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்து தனது தலைமைத்துவ போதாமையை உணர்த்திய வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், புளூம்ஃபாண்டீனில் நடைபெறும் இந்தப் போட்டியிலும் பசுந்தரையைப் பார்த்து முதலில் பேட் செய்யத் தயங்கி தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்து செய்த தவறையே மீண்டும் செய்தார்.
ஆனால் பிட்ச் பார்க்கும் போது இருக்குமளவுக்கு விஷயதாரம் இல்லாமல் செயல்படுகிறது. பிட்ச் தயாரிப்பாளர் அன்றே கூறினார், முதல் நாளுக்குப் பிறகு பிட்சின் ஈரப்பதம் குறைந்து 2-ம் நாள், 3-ம் நாளில் வேகப்பந்து வீச்சு எகிறும் என்றார். இதனைக் கருத்தில் கொண்டாவது முஷ்பிகுர் ரஹிம் பேட் செய்திருக்கலாம்.
ஆனால் டாஸ் வென்றவுடன் பீல்டிங் என்று தவறான முடிவை மீண்டுமொருமுறை எடுத்தார் முஷ்பிகுர் ரஹிம், இதனால் மீண்டும் முதல் போட்டி போலவே ‘எங்கே விக்கெட்டுகள்?” என்று தேடத்தொடங்கியுள்ளது வங்கதேசம்.
தென் ஆப்பிரிக்க அணியில் எல்கர் 83 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுக்க, மார்க்ரம் 86 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். டீன் எல்கர் எப்போதும் ஓவர் பிட்ச் பந்துகளையே பாதுகாப்பாக தடுத்தாடும் ஒரு தடுப்பாட்ட வீரர், ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் இந்த இன்னிங்சில் 81% எனும்போதே வங்கதேசத்தின் பந்து வீச்சைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.
இருவரும் நன்றாக ஆடி வருகின்றனர். இந்த நாளில் போகப்போக இன்னமும் வங்கதேசத்துக்குக் கடினமாகும், மாலை வேளையில் பவுலர்கள் களைப்படையும் போது டெஸ்ட் கிரிக்கெட் மேலேயே அவர்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது.
பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் நீங்கலாக, சுபாஷிஷ் ராய், ரூபல் ஹுசைன், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் ஒரு நல்ல லெந்தில் கூட வீச முடியாமல் சொதப்பினர். ஒருநாள் போட்டிகள் போல் பவுலர்களை மாற்றிக் கொண்டேயிருந்தார் முஷ்பிகுர் ரஹிம். ஒரு நீடித்த திட்டம் எதுவும் அந்த அணியினிடத்தில் இல்லை. எனவே மைதானத்தில் ஓடி ஓடியே களைப்படைவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.