அநுராதபுரத்தில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை வரையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு ஒன்றை அரச தலைவர் நேற்று வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
அரச தலைவரின் அறிவிப்பு நேற்று வரும் என்று எதிர்பார்த்து அதுவரையில், அதாவது புதன்கிழமை வரையில் நான்கு நாள்களுக்கே வகுப்புப் புறக் கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது என்று மாணவர்கள் முன்னர் தீர்மானித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கூடும் மாணவர்கள் போராட்டத்தை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்வதற்கு முடிவெடுப்பார்கள் என்று உதயன் அறிந்தான்.
அத்துடன் வெள்ளிக் கிழமை மாலை நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய பின்னர் அடுத்த கட்டநடவடிக்கை தொடர்பில் அவர்கள் தீர்மானிப்பர் என்றும் தெரிகிறது.
தற்போதைய நிலை குறித்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர், நேற்று மாலை கூடிக் கலந்துரையாடினர்.
இன்று காலை 10 மணிக்கு கைலாசபதி அரங்குக்கு முன்னால் மாணவர்கள் அனைவரையும்கூட்டி ஆலோசிப்பது என்று அதில் முடிவெடுக்கப்பட்டது.