முழுமையான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயி சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 420 வருவாய் கிராமங்களில் 51 வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மேலும் அரசு 100 % வறட்சி என அறிவித்தும் ஏக்கருக்கு 80% இழப்பீட்டுத் தொகையே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருந்தோருக்கு வங்கி நிர்வாகமே பிரிமியம் செலுத்தியிருந்தும் அத்தகைய விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, விவசாய சங்க நிர்வாகிகள் மயில்வாகனன், முருகேசன், கல்யாணசுந்தரம் மற்றும் சி.பி.எம். நிர்வாகிகள் காசிநாததுரை, சிவாஜி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் நடராஜன் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.