கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா இன்று (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள் என்பன நடைபெற்றன.
மேலும், புகையிர நிலையத்தில் விசேட வழிபாட்டு பீடம் அமைக்கப்பட்டு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நூற்றாண்டையொட்டி புதிய சுவர்ப் பூச்சுக்கள் பூசப்பட்டு, நடைமேடைகள் தோறும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு புகையிரத நிலையமாகக் காட்சியளித்தது.
தினசரி புகையிரத நிலையத்தைப் பயன்படுத்துபவர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து நூற்றாண்டை விதம் விதமாகக் கொண்டாடி வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், அன்றைய காலகட்டத்திலேயே சுமார் ஒரு கோடி ரூபா செலவில், பாரிய இரும்புக் கம்பிகள் மற்றும் கனரகப் பொருட்களைப் பயன்படுத்தி நிறுவப்பட்டது.