நியமனத்தை காலம் தாழ்த்தாது பெற்றுத்தர வேண்டுமென கோரி இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், வடக்கு மாகாண சபைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட தொண்டர் ஆசிரியர்கள் தமது நியமனம் குறித்து வடக்கு மாகாண சபை கவனஞ்செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக பல நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று, இறுதியில் 182 பேரின் நியமனங்கள் மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மூன்று மாதங்கள் கடந்துள்ள போதும், இதற்கான நடவடிக்கையை மாகாண சபை எடுக்காமல் இருப்பதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
நியமனத்திற்கான பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட போதிலும், சிலரின் அரசியல் நோக்கத்திற்காகவே இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள தொண்டர் ஆசிரியர்கள், தமக்கான நியமனத்தை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.