ஐ.பி.எல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் களமிறங்கும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு தோனி திரும்புவது குறித்த முடிவு அடுத்த மாதத்தில் தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன. அந்த அணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் வீரர்கள் பல்வேறு அணிகள் சார்பில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றனர். குறிப்பாக ஐ.பி.எல் தொடரின் வெற்றிகரமான அணியாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தடைக்காலம் முடிந்து ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி திரும்புவது எளிதாகும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ஐ.பி.எல் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் 3 பேரை ( இந்திய வீரர் ஒருவர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 2 பேர்) அந்தந்த அணிகளுக்குத் திரும்ப அளிக்கும் வகையிலான திட்டம் ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகக் குழு முன்மொழிய இருக்கிறது. ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுக்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அந்தத் திட்டம் முன்மொழிய இருக்கிறது. அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் புனே மற்றும் குஜராத் அணிகளுக்காகக் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள், தங்களது பழைய அணிக்குத் திரும்பும் வாய்ப்புகள் உருவாகும்’ என்றார். இதன்மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மீண்டும் அணிக்குத் திரும்புவது உறுதியாகும். இதுகுறித்து பேசிய ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா, ‘ஐ.பி.எல். உரிமையாளர்கள் கூட்டத்தில் ஒப்புதலைப் பொறுத்து பழைய அணிகளுக்கே திரும்பும் வீரர்களின் எண்ணிக்கை 3 முதல் 5 ஆக இருக்கும்’ என்றார்.