அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று பிரதான உள்ளூராட்சி மன்றங்களில் தீயணைப்பு படையினரின் வினைத்திறனை கட்டியெழுப்புவதற்கான விசேட பயிற்சி ஒத்திகை நிகழ்வொன்று இன்று அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அம்பாறை நகர சபை, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் என்பவற்றின் தீயணைப்பு படையினர் பங்கேற்றிருந்தனர்.
இவ்வொத்திகை நிகழ்வுக்கு அம்பாறை இராணுவத்தினர் முழுமையான அனுசரணை வழங்கி, தீயணைப்பு படையினருக்கு பயிற்சிகளை வழங்கினர். அம்பாறை நகர சபை மற்றும் வைத்தியசாலை என்பன இந்த ஒத்திகைக்கான ஒழுங்குகளை செய்திருந்தன.
ஒரு இடத்தில் தீவிபத்து இடம்பெறும்போது அதனை விவேகத்துடன் விரைவாக அணைக்கும் நடவடிக்கைகளை எவ்வாறு திறம்பட முன்னெடுப்பது, தீ விபத்தில் சிக்குண்டவர்களை எவ்வாறு விரைந்து காப்பாற்றுவது, காயமடைந்தோருக்கு எவ்வாறு முதலுதவி வழங்கி, வைத்தியசாலைகளில் சேர்ப்பது போன்ற பல்வேறு விடயங்களில் அறிவூட்டலும் பயிற்சியும் இதன்போது வழங்கப்பட்டது.
இப்பயிற்சி ஒத்திகையானது உண்மையான சம்பவங்கள் போன்று மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாகவும் தீயணைப்பு படையினருக்கு மிகவும் பயன்மிக்கதாக அமைந்திருந்ததாகவும் கல்முனை மாநகர சபை தீயணைப்பு படைப்பிரிவின் பொறுப்பாளர் முஹம்மட் ரூமி தெரிவித்தார்.