கடும் வறுமையான நிலையிலும் புலமை பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தொடர்பில் நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த மாணவியை தன்னிடம் அழைத்து வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம் ஊடாக கலேவெல கல்வி இயக்குனரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை புலமை பரிசீல் பரீட்சையில் துலஞ்சலி மதுமாலி பிரேமரத்ன என்ற மாணவி 168 புள்ளிகளை பெற்றுள்ளார்.
திக்கல ஆரம்ப பாடசாலை 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முதல் முறையாக புலமை பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவி இவராகும்.
மாணவியின் தந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது தாயார் தற்போது கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றார்.
அதற்கமைய உடனடியாக செயற்படும் வகையில் சிறுநீரக நோய் நிவாரண நிதியை மாணவியின் உயர்தரம் கல்வி வரை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளுர் ஊடகங்களில் துலஞ்சலி மதுமாலி தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகி இருந்தன.
இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி, குறித்த மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு, சிறுநீரக நிவாரண ஜனாதிபதி நிதி இயக்குனர் அசேல இந்தவெலவுக்கு தொலைபேசி ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி இல்லத்திற்கு குறித்த மாணவியை இன்றைய தினம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.