மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் 10 வயது மகளை, வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையை, ஏறாவூர் பொலிஸார் நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாய், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
குடும்பத்தின் மூத்த பிள்ளையான சிறுமி, தனது இரு சகோதரர்களுடன் தந்தையினதும் பாட்டியினதும் பராமரிப்பில் இருந்த வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நண்பகல் வேளையில், தந்தையால், சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில், சிறுமியால் பாட்டியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, பாட்டியால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, 32 வயதான மேசன் தொழிலில் ஈடுபடும் குறித்த சிறுமியின் தந்தையை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.