தலைப்பு பஞ்சாயத்து, சென்சார் பஞ்சாயத்து என தடைகள் பல கடந்து விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறது. உலகம் முழுக்க 3200 தியேட்டர்களில் மெர்சல் வௌியாகியுள்ளது.
ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைத்துள்ள மெர்சல் படம் ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாலும், ஏற்கனவே பாடல்கள், டீசர் எல்லாம் சாதனை படைத்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், படம் ரிலீஸாகும் சமையத்தில் விஜய்யின் முந்தைய படங்களை போன்று மெர்சல் படமும் ரிலீஸில் சிக்கலை சந்தித்தது. மெர்சல் படத்தின் தலைப்பு என்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த பிரச்னை தீர்ந்தது. படம் ரிலீஸாக ஒரு நாள் இருந்தநிலையில் விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று வழங்காததால் சென்சார் போர்டின் சான்றும் நிலுவையில் இருந்தது. பின்னர் விஜய், முதல்வரை சந்தித்த பின்னர் அந்த பிரச்னையும் தீர்ந்து ஒருவழியாக நேற்று காலை அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தன.
இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி விஜய்யின் மெர்சல் படம் உலகம் முழுக்க 3200 தியேட்டர்களில் தீபாவளி சரவெடியாக இன்று(அக்.,18) வௌியானது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தினர். தீபாவளி பண்டிகை மற்றும் விஜய் படம் என்பதால் அதிகாலை 4மணிக்கே தியேட்டர்களில் படம் ரிலீஸானது.
தமிழகத்தை விட மலையாளத்தில் மெர்சல் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ் ரசிகர்களை விட மலையாள ரசிகர்கள் மெர்சல் படத்தை செம்மையாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் மெர்சல் ரிலீஸாகிறது. அதேப்போன்ற, தெலுங்கில் அதிரிந்தி என்று டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகி உள்ளது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெர்சல் இந்நிறுவனத்தின் 100-ஆவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.