டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இன்று தொடங்கும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்குகிறார். இந்த சீசனில் அவர் இந்தியா ஓபன், கொரிய ஓபன் தொடர்களில் ஏற்கெனவே பட்டம் வென்றுள்ளார். கடந்த மாதம் சியோலில் நடைபெற்ற தொடரில் சிந்து, 2-வது சுற்றுடன் வெளியேறியிருந்தார்.
அந்தத் தொடரில் ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவிடம், சிந்து தோல்வி கண்டிருந்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற ஜப்பான் ஓபனிலும் சிந்துவுக்கு ஒகுஹரா கடும் சவால் அளித்திருந்தார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிந்து கடந்த 3 வார காலம் தீவிர பயிற்சிக்கு பின்னர் தற்போது புத்துணர்ச்சியுடன் டென்மார்க் ஓபனை சந்திக்கிறார். இந்தத் தொடரில் சிந்து தனது முதல் சுற்றில், தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுபியை எதிர்த்து விளையாடுகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் சென் யுபியை, சிந்து வீழ்த்தியிருந்தார். போட்டி அட்டவணைப்படி அரை இறுதியில் சிந்து, 7-ம் நிலை வீராங்கனையான ஹீ பிங் ஜியோவுடன் மோதக்கூடும். இடது கை வீராங்கனையான அவர், சிந்துவுக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால், 16 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக சூப்பர் சீரிஸ் தொடரில் களமிறங்குகிறார். தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சாய்னா, சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் 5-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின் மரினிடம் தோல்வி கண்டிருந்தார். 2-வது சுற்றுடன் வெளியேறியிருந்த சாய்னா, தற்போது டென்மார்க் ஓபனின் முதல் சுற்றில் கராலின் மரினை சந்திக்கிறார்.
இவர்கள் இருவரும் இதுவரை நேருக்கு நேர் 8 ஆட்டங்களில் மோதி தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். கடைசியாக சாய்னா, 2015-ம் ஆண்டு நடைபெற்ற துபை உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் தொடரில் தான் கரோலின் மரினை வீழ்த்தியிருந்தார்.
கடைசி இரு மோதல்களிலும் கரோலின் மரின் நேர் செட்களில் வெற்றி பெற்றிருந்தார். ஜப்பான் ஓபனில் பட்டம் வென்ற அவரை, வீழ்த்த சாய்னா கூடுதல் முயற்சி எடுக்கக்கூடும்.
ஆடவர் பிரிவில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது சுற்றில், தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரருடன் மோத உள்ளார். இந்த ஆண்டில் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா தொடர்களில் அடுத்தடுத்து பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஜப்பான் ஓபனில் கால் இறுதி வரை முன்னேறியிருந்தார். இம்முறை பட்டம் வெல்லும் முனைப்புடன் அவர், களமிறங்குகிறார்.
போட்டி அட்டவணைப்படி ஸ்ரீகாந்த், கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரும் உலக சாம்பியனுமான டென்மார்க்கின் விக்டர் அக்சல்செனை எதிர்கொள்ளக்கூடும். ஆடவர் பிரிவில் மற்ற இந்திய வீரர்களான சாய் பிரணீத், பிரணோய், சமீர் வர்மா உள்ளிட்டோரும் களமிறங்குகின்றனர். இந்த சீசனில் சாய் பிரணீத் சிங்கப்பூர் ஓபனிலும், பிரணாய் யுஎஸ் ஓபனிலும் பட்டம் வென்றிருந்தனர் .
பிரணாய் முதல் சுற்றில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டையும், சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனையும் எதிர்கொள்கின்றனர். சையது மோடி தொடரில் பட்டம் வென்ற சமீர் வர்மா தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரருடன் மோதுகிறார். 2-வது சுற்றில் பலம் வாய்ந்த விக்டர் அக்சல்செனை சந்திக்க உள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடியும் சாட்விக்சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடியும் கலப்பு இரட்டையரில் சாட்விக்சாய்ராஜ், அஸ்வினி ஜோடியும் களமிறங்குகிறது