ஜப்பானில் வரும் அக்டோபர் 22-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஷின்சோ அபே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக் காலம் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் அச்சுறுத்தல்களால் ஜப்பானில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.
இதனைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பிரதமர் அபே கடந்த மாதம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானில் வரும் அக்டோபர் 22-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை அந்நாட்டு தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் நடத்தி வருகின்றன.
ஜப்பானின் பிரதான செய்தித்தாளான மைனிச்சி ஷிம்பன், கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பான் நாடாளுமன்றம் தொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் 70,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதன்படி ஜப்பானில் மொத்தமுள்ள 465 இடங்களில் 303 இடங்கள் ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மைனிச்சி ஷிம்பன் மட்டுமல்லாது பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளும் ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஷின்சோ அபே வெற்றி பெறுவார் என்றே தெரிவித்துள்ளன.