நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக இருந்த நிலையில், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் மக்களின் ஆணையும் இருந்த போதிலும், நீதியான சமுதாயத்துக்கான தேசிய இயக்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்கவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக பதவியில் இருக்கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.