தாய்வான் வர்த்தக வங்கி கட்டமைப்புக்குள் ஊடுருவி பல மில்லியன் டொலர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரை எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சைபர் குற்றவாளிகள் மற்றும் சைபர் தாக்குதலுக்காக, குறித்த இரு இலங்கையர்களும் உதவி செய்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இலங்கையரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாய்வான் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னர் 13 இலட்சம் டொலர் இலங்கையின் 3 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதில் 3 கோடி ரூபாய் பணத்தை இந்த இலங்கையர்களினால் வங்கியில் பெற்று கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலதிக 9 கோடியை பெற்றுக் கொள்ள வந்த சந்தர்ப்பத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் தாய்வான் பொலிஸ் மற்றும் விசாரணை பிரிவுகளுடன் இணைந்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சைபர் தாக்குதலின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தொகை டொலர்கள், இலங்கை, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வங்கி கணக்குகள் பலவற்றில் வைப்பிடப்பட்டுள்ளது.