எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலைப் பேணுவதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டிய சகல செயற்திட்டங்களும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நேற்று (16) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற Sri Lanka NEXT நீல பசுமை யுகத்திற்கான தேசிய செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீல பசுமை யுகத்திற்கான தேசிய செயற்திட்டம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதுடன் அதனுடன் இணைந்ததாக விரிவுரைகள், மாநாடு மற்றும் விவாதங்கள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் இடம்பெற்ற உலகளாவிய காலநிலை மாற்றங்கள் பற்றிய அரச தலைவர்களின் மாநாட்டில் பூகோள வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்பட்டன.
ஆசிய வலய நாடு என்ற வகையில் இலங்கை முதலாவதாக அவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், பசுமை அபிவிருத்தி தொடர்பான பல்வேறு துறைகளிலும் விசேட கவனம் செலுத்தி நீலப்பசுமை யுகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சீமெந்து கட்டிடங்கள் நிறைந்த நகரச் சூழலிலிருந்து விடுபட்டு மரங்கள், இலை, செடிகொடிகள், நீரோடைகள் என்பவற்றுடன் போஷிக்கப்பட்ட இயற்கையைப் பாதுகாத்து நாட்டினை பசுமை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
சூழலானது மனிதனுக்கு சவால்மிக்க காரணியாக மாறியுள்ள தற்காலத்தில் சூழலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சகலரும் தாமதமின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
சுற்றாடல் விருதுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டன.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, தயா கமகே, பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் சார்க் நாடுகளின் சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.