சிங்களவர்களை தூண்டி விட்டு ஆட்சியை கைப்பற்ற திட்டம்! – அரசியல் சதுரங்கத்தில் பலிஆடு யார்?
எழுக தமிழைத் தொடர்ந்து தென்னிலங்கை கொந்தளித்துப் போனது குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியினர் வடக்கு முதல்வர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதற்கு பின்னர், முதலில் கைது கோரிய மஹிந்த ராஜபக்ச பின்னர் விக்னேஸ்வரனுக்கு சாதகமான கருத்துகளை முன்வைத்தார், அதனைத் தொடர்ந்து அடங்கிப் போனது தென்னிலங்கை என்பதே உண்மை.
ஆனாலும் ஒருபக்கம் அடக்கப்பட்டாலும் அவை மற்றொரு பக்கம் வேறு விதமாக தூண்டப்படுகின்றது அதாவது சிங்களவர்களும் எழ வேண்டும் என்பதே அது.
அண்மையில் பிவிதுரு ஹெல உருமய ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய மதுமாதவ அரவிந்த,
வடக்கில் அப்பாவி இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்கள் கழுத்தில் விச குப்பிகளை தொங்கவிடும் செயற்பாட்டினையே விக்னேஸ்வரன் செய்திருந்தார். அரசியல் இலாபங்களுக்காக அப்பாவிகள் பலிவாங்கப்படக்கூடாது எனவும் கூறினார்.
மேலும் இவற்றினை பார்க்கும் போது சிங்களவர்களே எழுங்கள் என்றே கூறவேண்டும், இலங்கை நாட்டில் எப்போதுமே சிங்களவர்களால் பாதிப்பு ஏற்பட வில்லை அவர்கள் குண்டு போட்டு அழிக்கவில்லை. அரசியல் இலாபங்களுக்காக இளைஞர்கள் திசை திருப்பப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.
இதேபோல் பிரபல நடிகை ஓசாதி ஹேவாமந்தும ஊடகங்களிடம்,
வடக்கு முதல்வரின் கருத்து நாட்டில் மீண்டும் கருப்பு ஜூலையை நினைவுபடுத்தி விடும் அவ்வாறான நிலையை மீண்டும் ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சநிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அன்று கருப்பு ஜூலையை உருவாக்கியது ஐக்கிய தேசிய கட்சியே எனவும் தெரிவித்தார்.
இவையே தென்னிலங்கையில் பலரும் வலியுறுத்திய கருத்தாக மாறியது.
அதனைத் தொடர்ந்து இன்று இரத்தினபுரி கூட்டத்திலும் உரையாற்றிய பிக்குகள் உட்பட பலரும் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் பொறுத்தது போதும் என்பதையே வலுப்படுத்தி கூறினர்.
குறிப்பாக இங்கு கூட்டு எதிர்க்கட்சி சார்பில் உரையாற்றிய ஒருவர் சிங்களவர்களையும் பௌத்தர்களையும் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் இருந்தும் அகற்ற முடியாது. நாட்டில் தற்போது சிங்களவர்கள் அனைவரும் எழவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.
உண்மையில் இரத்தினபுரியில் “போராட்டத்துக்கு உயிர் கொடுக்கும் புதிய மக்கள் சக்தி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது ஆட்சி மாற்றத்திற்காகவா? அல்லது சகோதர சிங்கள இன மக்களை தூண்டிவிடுவதற்காகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கில் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தும் நிலையை இங்கு தமிழ் மக்களுக்கு எம்மால் ஏற்படுத்த முடியும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இவற்றினை ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்கும் போது வடக்கு முதல்வர் கைது செய்யப்பட்டால் வடக்கு மக்கள் கொந்தளிக்கக்கூடும் அதனை எதிர்ப்பார்த்தே அவரின் கைது கோரிக்கை தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அவரின் கைது சாத்தியமற்ற ஒன்றே. அவரது உரை மக்களின் கோரிக்கை மட்டுமே. அதனை தெளிவாக புரிந்து கொண்டதன் பின்னர் அவரின் கைது விடயம் பெரிதாக்கப்படாமல் மாற்றப்பட்டது.
தற்போது தென்னிலங்கையை குழப்பிவிட்டு அதன் காரணமாக நாட்டில் பதற்ற நிலையை தோற்றுவித்து நம்பிக்கையற்ற விதத்தில் ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டால் இலகுவாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
அதற்காகவே தற்போது ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு உயிர் கொடுக்கும் புதிய மக்கள் சக்தி என்றே அவதானிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.