“இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயங்களை உள்நாட்டில் முன்னெடுக்கத் தவறினால் அது வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் என்று நாம் முன்னரே கூறியிருந்தோம். இதே சாரப்பட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ வெளியிட்ட கருத்தையும் நாம் வரவேற்கின்றோம். இலங்கை அரசுக்கு சொல்லவேண்டிய விடயங்கள் அனைத் தையும் அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு உள்நாட்டில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கத் தவறினால் வெளிநாட்டில் அது முன்னெடுக்கப்படக்கூடும் என்று ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. அறிக்கையாளர் கூறியதை நாம் வரவேற்கின்றோம். நாம் இதே விடயத்தை முன்னரே வலியுறுத்தியிருந்தோம். சர்வதேச சமூகத்திற்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சிமாற்றத்தின் பின்னர், 100 நாட்கள் வேலைத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட விடயங்களே செய்யயப்படவில்லை என்று ஐ.நா. அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயங்களை அரசு செய்யத் தவறினால் உலக நியாயாதிக்கத்தை அரசால் தவிர்க்கமுடியாது. வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்” – என்றனர்.