சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தலைநகரமான கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உட்பட 13 பேர் காயமடைந்ததோடு ஆர்ப்பாட்டத்தின்போது கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் ஆகியன முன்னெடுத்திருந்தன.
ஸ்ரீலங்கா பிரதமரின் வாசஸ்தலமான அலரிமாளிகை வரை செல்லத் திட்டமிடப்பட்டு கொழும்பு 7 இல் உள்ள விகாரமஹாதேவி பூங்காவுக்கு முன்பாக இன்று பகல் ஆரம்பமான சைட்டம் எதிர்ப்பு பேரணி தும்முல்ல சந்தியை கடந்து பம்பலப்பிட்டி சந்தி வரை சென்றது.
பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டியை நோக்கி மாணவப் படை தனது ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.
குறித்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகளை போட்டு மாணவர்களின் பேரணிக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அந்த தடைகளையும் மீறி பிரதமரின் வாசஸ்தலம் நோக்கி சைட்டம் எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர் பேரணி செல்வதற்கு முயற்சித்தபோது அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
பதற்றநிலையை சமாளிப்பதற்காகவும், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கும் பொலிஸாரும், கலகத்தடுப்பு பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பௌத்த பிக்கு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 13 பேர் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜசிங்க குறிப்பிட்டார்.
சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ மற்றும் சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த பாதசாரிகளும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.