நடந்து முடிந்த இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த போதிலும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு விளையாட வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. இப்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்று இந்தியக் கேப்டன் விராட் கோலி பதிலளித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் செய்தியாளர்களுடன் பேசிய கோலி, “ராகுல் ஒரு நல்ல துவக்க வீரர். இந்திய அணியில் தற்போது ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் ரஹானே என்று மொத்தம் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய நிலை வரும். அது ராகுலின் திறனுக்குச் சரிவராத இடம். இது அவரைக் கட்டாயப்படுத்துவது போன்று ஆகும்.
இதற்கு முன் ரஹானேவிற்கும் இதே பிரச்னை வந்தது. அதே சமயம், தினேஷ் கார்த்திக் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். அவருக்கு மிடில் ஆர்டரில் ஆடுவது கை வந்த கலை. ராகுலும் இதை நன்கு உணர்வார். இந்த இடைவெளி அவர் உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த உதவும். தனி ஒருவரை மட்டும் பார்க்காமல், மொத்த அணிக்கு என்ன தேவையோ, வெற்றிக்கு என்ன தேவையோ அதைத் தான் செய்ய முடியும்” என்று விளக்கமளித்தார்.