ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும், பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர். எனினும், இந்த விடுதலைப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்தார்.மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் வகையில் விடுதலைப் பிரகடனத்தை செயல்படுத்துவது நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.
“சுதந்திரமான, இறையாண்மை உள்ள நாடாக கேட்டலோனியாவை அங்கீகரிக்கவேண்டும்,” என்று அந்தப் பிரகடனம் வேண்டுகோள் விடுக்கிறது.
அக்டோபர் 1-ம் தேதி நடந்த கருத்து வாக்கெடுப்பில் கேட்டலோனியா பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் காரணமாக கேட்டலோனியா விடுதலை பெறுவதற்கான உரிமையைப் பெற்றதாக செவ்வாய்க்கிழமை கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் பேசிய பூஜ்டியமோன் தெரிவித்தார்.
“கேட்டலோனியக் குடியரசை சுதந்திரமான இறையாண்மை மிக்க அரசாக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அங்கீகரிக்கவேண்டும்,” என்று விடுதலைப் பிரகடனம் வேண்டுகோள் விடுக்கிறது.
மக்களின் விருப்பம், ஸ்பெயினிடம் இருந்து கேட்டலோனியா தனி நாடாகப் பிரிந்து செல்லவேண்டும் என்பதே என்று கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் கூறிய பூஜ்டியமோன், அதே நேரம் தாம் இந்த விஷயத்தில் பதற்றத்தைத் தனிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
“நாமெல்லாம் ஒரே சமூகத்தின் அங்கங்கள். எனவே சேர்ந்தே முன்னோக்கிச் செல்லவேண்டும். முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி ஜனநாயகமும், அமைதியும்தான்,” என்று அவர் கூறினார்.
கேட்டலோனியா ஸ்பெயின் நாட்டிலுள்ள தன்னாட்சி பிரதேசம் ஆகும். தன்னாட்சி பிரதேசமாக இருந்த கேட்டலோனியாவுக்கு, கடந்த 2005-ஆம் ஆண்டு, கேட்டலோனிய மொழி, வரி மேலாண்மை, நீதித் துறை நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், அப்பகுதிக்கு “நாடு” என்னும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி ஸ்பெயின் நாட்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு ரத்து செய்தது தனி நாடு கோரிக்கையை வலுபெறச் செய்தது.
கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் பிரிவினைக்கான ஆதரவு பெரும்பான்மையாக இருந்தாலும், ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பெரும்பாலானோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.
“திரும்பி வர முடியாத பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்றும், தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட வேண்டாம்,” என்றும் ஸ்பெயின் அரசு பூஜ்டியமோனுக்கு அறிவுறுத்தி இருந்தது.
நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒரு மணி நேரம் கேட்டலான் கட்சியின் தலைவர்கள் கூடிப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அங்குள்ள பாதைகள் மூடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 1ம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா மாகாணம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர்.
வாக்களித்த 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் கேட்டலோனியாவின் பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பே செல்லாது என்று அறிவித்திருந்தது.
வாக்கெடுப்பிற்கு பிறகு கேட்டலோனியா மாகாணம் மட்டுமல்லாமல் ஸ்பெயினின் பார்சிலோனா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரணிகள் நடைபெற்றன.