கனடாவில் பறந்த கிருஷ்ணகிரி மானம்! அரசு மருத்துவமனைகளின் நேரடி அவலம்

கனடாவில் பறந்த கிருஷ்ணகிரி மானம்! அரசு மருத்துவமனைகளின் நேரடி அவலம்

தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து கனடா பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிபரம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ‘ பலதரப்பட்ட நோய்களுக்கும் ஒரே மாத்திரைகளைக் கொடுப்பதால், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை’ என அதிர வைக்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள்.

கனடா நாட்டில் குயல்ப் பல்கலைக்கழக(Guelph university) ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவ ஆய்வு நடத்த வந்துள்ளனர். முதன்மை ஆய்வாளர் மருத்துவர் வாரன் டோட் தலைமையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 26 கிராமங்களில் 1,693 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ‘ இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடவும், முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமும் சமூக அறிவியலும் (medicine and social science) என்ற சர்வதேச மருத்துவ இதழில் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ” தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் எந்தளவுக்குச் செயல்படுகின்றன என்பதற்கு, மருத்துவர் வாரன் டோட்டின் ஆய்வு மிக முக்கியமானது. நமது நாட்டில் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் நிதியில் 90 சதவீதம் நகர்ப்புறங்களுக்கும் பத்து சதவீதம் கிராமப்புறங்களுக்கும் செல்கின்றன.

கிராமங்களுக்குச் செல்லும் நிதியில் 90 சதவீதத் தொகைகள், ஆரம்ப சுகாதார மைய ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. தரமான மருந்துகளும் வேறு வழிகளுக்கு திசை திருப்பப்படுகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேருவதில்லை. அதுகுறித்த எந்த அக்கறையும் மாநில சுகாதாரத்துறைக்கு இல்லை” என ஆதங்கத்தோடு பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி. தொடர்ந்து நம்மிடம்,

” கனடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் முறையாக செயல்படாததால், 79 சதவீத மக்கள் நோய்வாய்ப்படும்போது, அங்கு செல்வதில்லை எனப் பதில் அளித்துள்ளனர். குடும்ப வறுமை மற்றும் மருத்துவமனைகள் நன்றாக செயல்படாததால் நோய்வாய்ப்படும்போது 78.8 சதவீத மக்கள் மருந்துகளையே நாடுவதில்லை எனத் தெரிவித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தவிர, நீண்டநேரம் மருத்துவமனைகளில் காத்திருப்பது, ஊழல், முறையாகச் செயல்படாமை, போதுமான சுகாதார பணியாட்கள் இல்லாமல் இருப்பது, பரிசோதனை செய்வதற்கு ஏற்ற வசதிகள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் 68 சதவீத மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தருவதையே விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காக்க வைப்பதால், தங்களுடைய அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதில், 32 சதவீத மக்கள் மட்டுமே, மருத்துவ வசதிகள் திருப்தியளிப்பதாக கூறியுள்ளனர். கிராமப்புற மக்களில் 93.3 சதவீதம் பேர், தனியார் மருத்துவமனைகள் அதிக பணம் பிடுங்குவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கிராமங்களில் 22.3 சதவீத மக்கள் நாள்பட்ட மற்றும் பெரு வியாதிகளான சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.6 சதவீத மக்கள் கை, கால் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் 90 சதவீத மக்கள் கடின உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான்.

குறைந்த செலவு விரைவில் குணம் என்பதே மக்களின் தாரக மந்திரமாக உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் மிகக் குறைந்த நேரத்தையே செலவிடுகின்றனர். எந்த வியாதியாக இருந்தாலும் ஒரே மாத்திரைகளையே கொடுக்கின்றனர். இவைதான் மக்கள் முன்வைக்கும் பிரதானமான குற்றச்சாட்டுகள். சர்க்கரை நோய் போன்ற பெருவியாதிகளைப் பொறுத்தமட்டில், அரசைவிட தனியார் மருத்துவமனைகள் சிறந்த சிகிச்சை அளிக்கின்றன.

பெருவியாதிகளுக்கு 70 சதவீத மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான முறையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா என்றால், அதுவும் கேள்விக்குறிதான்.

சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகைகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்ன நிலையோ, அதுதான் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. அந்தளவுக்கு முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. பலதுறைகளில் முன்னேறிய மாநிலம் என்று சொல்லித்தான், கனடா பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு நடத்த வந்தார்கள். ஆனால், இங்குள்ள கள நிலவரத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இனியாவது பொது சுகாதாரத்தில் அதிகாரிகளும் அமைச்சரும் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார் ஆதங்கத்தோடு.

கனடா பல்கலைக்கழக ஆய்வு சொல்லும் உண்மை ஒன்றுதான். நமது மாநிலத்தில் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் எங்குதான் செல்கின்றன?

M2r10.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News