இலங்கையை வேவு பார்க்க வந்தாரா பான் கீ மூன்?
பான் கீ மூன் இலங்கைக்கு உண்மையில் எதற்காக வந்தார்? என்பதிலேயே தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசு மேற்கு நாடுகளோடு பகைத்துக் கொண்டதன் பின்னரான நாட்களில், இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இலங்கை மீது எழுந்த அழுத்தங்களை நல்லாட்சி விலக்கும் நடவடிக்கைகளில் மிக வேகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதற்கான ஒரு செயற்பாட்டிற்காகவே பான் கீ மூன் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் திணிக்கப்படக் கூடாது.
இலங்கை தணித்து சுதந்திரமாக செயற்பட வேண்டுமாயின் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டு விலக்கப்படவேண்டும்.
அது மட்டுமே தற்போது இலங்கைக்கு உள்ள நெருக்கடி.
பான் கீ மூன் இலங்கைக்கு வரும் போது முழு நாட்டினதும் கவனம் அவர் மீது திரும்பியிருந்தது நினைவிருக்கும். ஒரு பக்கம் தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஒரு சாராரும் மறுபக்கம் பான் கீ மூன் வெள்ளைத்தோல் போற்றிய புலி என்று கடும்போக்கு வாதங்களுமே நிலவியிருந்தது.
இதேவேளை உலகில் நடைப்பெற்ற கொடும் போர்களை வேடிக்கைப்பார்த்தது போல் இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற அநீதிகளையும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பான் கீ மூன் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இங்கு உலகில் இடம் பெற்ற கொடும் யுத்தங்களோடு இலங்கை யுத்தத்தையும் அவர் இணைத்துக்கொண்டது அவரின் வார்ததைகளினால் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனாலும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், நல்லிணக்கம் என்பவை மகிழ்ச்சியைத் தருவதாகவுமே அவர் குறிப்பிட்டிருந்தார் எதற்காக இந்த முரண்பட்ட கருத்துகள்.
அவர் நல்லிணக்கம் என்று எதனைக் கூற முற்பட்டார் அவரின் விஜயத்தின் போது மக்களின் கருத்துக் கணிப்புக்கு இடம் கொடுக்கப்பட வில்லை, வடக்கு விஜயமும் பின்வாசல் விஜயமாகவே அமைந்தது. நேரடியாக மக்களை அவர் சந்திக்க வில்லை.
இதன்போது ஒன்றும் அறியாமல் நல்லிணக்கம் என்று அவர் கூறியது எப்படி என்ற சந்தேகம் ஏற்படுவது சகஜமே.
வடக்கு மக்களிடம் அவர் நேரிடையாக சந்திக்க முடியாத வகையில் அரசின் தலையீடு காணப்பட்டது.
இந்த நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரின் அளவை குறைப்பதன் மூலமே, நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும் எனவும் ஐ நா செயலாளர் தெரிவித்துச் சென்றார்.
ஆனாலும் அவர் சென்றதன் பின்னர் இராணுவ ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததே தவிர குறைக்கப்பட வில்லை, காணிகள் விடுவிப்பு என்ற வகையிலும் அதே நிலவரம் தான்.
வெறும் ஆடம்பர சுற்றுலா நோக்கத்தோடு தான் அவர் இலங்கை வந்தாரா?
தற்போதைய ஆட்சி திட்டமிட்டு சர்வதேசத்திடம் நற்பெயர் பெற்று கொள்ளவும்
போர்க்குற்றம் உரிமைமீறல் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தப்பிக் கொள்ளவும் செய்கின்ற செயற்பாடுகளே இவை எனவும் நோக்குனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன் போக்கிலேயே பான் கீ மூனின் இந்த விஜயமும் கொள்ளப்பட வேண்டும். தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் வெளியிடும் அறிக்கை கவனம் பெறும். அதில், எப்படியாவது நற்பெயரைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மைத்திரி – ரணில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது.
தற்போது பான் கீ மூன் இலங்கை தொடர்பில் வழங்கும் அறிக்கை எவ்வகையில் அமையும் அதன் மூலமும் ஐ நா மூலமும் இலங்கையில் உண்மையான நல்லிணக்கங்கள் ஏற்படுமா என்பதே தற்போதைய வினா.