தம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வீடு ஒன்றுக்குச் சென்ற மூவர் வீட்டாரை அச்சுறுத்தி அவர்களின் கண்களைக் கட்டி வீட்டின் ஓரிடத்தில் அமரச் செய்த பின்னர் பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதுளைப் பகுதியின் கீனக்கலை என்ற இடத்தில் ச இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் சென்ற பின்னர், கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கணவனும் மனைவியும் அதனை ஒருவாறு அகற்றிய பின்னர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்முறைப்பாட்டில் ஐம்பதாயிரம் ரூபா பணமும் ஐந்து பவுண் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உடைகளை ஒத்த உடையணிந்திருந்த இந்த மூவரும் தாம் பொலிஸார் என்று கூறி குறித்த வீட்டிற்குள் சென்று வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் அச்சோதனைக்கு இடையூறுகள் ஏற்படக் கூடாதென்று கூறி, பயமுறுத்தி தம்பதியினரின் கண்களைக் கட்டி ஓரிடத்தில் அமரச் செய்து கொள்ளையிட்டுள்ளனர்.
இம்முறைப்பாட்டையடுத்து, பதுளை பொலிஸார் மோப்ப நாய்களின் துணையுடன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை சென்றே கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலுமொருவர் தங்கச்சங்கிலியுடன் தலைமறைவாகியுள்ளார். விரைவில், அந்நபரையும் கைது செய்ய முடியுமென்று, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 35 ஆயிரம் ரூபாவை, பொலிஸார் மீட்டுள்ளனர்.
இக்கொள்ளையில் ஈடுபட்ட மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.