யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ “அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி, இது மிக மிக முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
யு-17 உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க வந்துள்ள ஃபிபா தலைவர் “இந்தியா இப்போது கால்பந்து நாடாகும், அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி, இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது, இங்கு வந்திருப்பது பெரு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது” என்றார்.
2019-ல் யு-20 உலகக்கோப்பையை இந்தியா நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் ஃபிபா தலைவருக்கும் இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு துணைத் தலைவர் சுப்ரதா தத்தாவுக்கும் இடையே நடைபெறுகிறது என்று கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யு-17 உலகக்கோப்பை வரலாற்றில் சீனா-1985-ஐ இந்தியா கடந்து விடும் என்று தெரிகிறது. அதாவது யு17 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் மக்கள் ஸ்டேடியத்துக்கு போட்டிகளைக் காண வருகை தந்துள்ளனர்.
வரும் 28-ம் தேதி நடைபெறும் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார் கியானி இன்ஃபான்டினோ.