ஆப்கானிஸ்தானில் கடந்த 2012–ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது.
கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை திருமணம் செய்திருந்தார். இவர்கள் கடந்த 2012–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி ஆயுததாரிகளால் கடத்தப்பட்டனர். அப்போது கெயித்லான் கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். இடையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த அமெரிக்க படைகளால், தம்பதியினர் சிறைவைக்கப்பட்டு இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை.
ராணுவம் மீட்டது
இந்த நிலையில் ஜோசுவா –கெயித்லான் தம்பதியையும், அவர்களது 3 குழந்தைகளையும் பயங்கரவாதிகள் கடந்த 11–ந் தேதி குர்ரம் பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தானுக்குள் கொண்டு சென்றதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. உடனே இது குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து அதிரடியாக களத்தில் இறங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், ஆயுததாரிகளுடன் தீவிர சண்டையிட்டு பாயல் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின் போது பாயலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.