பிரேசிலைச் சேர்ந்த 24 வயது டெரெக் ரபெலோ, உலகின் முதல் பார்வையற்ற தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரர்! இவரது அப்பா அலை சறுக்கு விளையாட்டுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். பிறக்கும்போதே ரபெலோவுக்குப் பார்வை இல்லை. மகனுக்காக வருத்தப்பட்ட பெற்றோர்கள், அந்தக் குறையைத் தெரியாமல், சாதாரணக் குழந்தைபோல் வளர்க்க முடிவு செய்தனர். இரண்டு வயதில் ரபெலோவைக் கடலுக்கு அழைத்துச் சென்றார் இவரது அப்பா. சிறிதும் பயமின்றி கடல் அலைகளுடன் விளையாட ஆரம்பித்தார். 17 வயதில் முதல்முறையாக அலை சறுக்கு போர்டை வைத்து கடலுக்குள் இறங்கினார். முதலில் சற்றுச் சிரமமாக இருந்தது. ஆனால் பெற்றோர், நண்பர்களின் வழிகாட்டுதலிலும் உற்சாகத்திலும் ரபெலோ அலைகளுடன் மோத ஆரம்பித்தார். அலை சறுக்கு விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து, பயிற்சி எடுத்துக்கொண்டார். நாளடைவில் அத்தனை நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார். ஒரு தொழில்முறை அலை சறுக்கு வீரராக மாறினார்!
“பார்வை இல்லாவிட்டாலும் அலைகளுடன் விளையாட முடியும் என்ற நம்பிக்கையை என் அப்பாதான் விதைத்தார். என்னால் பார்க்கத்தான் முடியாதே தவிர, மற்ற புலன்களை வைத்து அலைகளின் செயல்பாட்டை நன்றாகப் புரிந்துகொள்வேன். நான் இன்று ஒரு தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரராக இருப்பதில் என் நண்பர்களுக்கு அதிகப் பங்கு இருக்கிறது. அவர்கள்தான் என்னுடன் பொறுமையாக விளையாடினார்கள். அதன் மூலம் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிந்தது. நான் உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தபோது, எல்லோரும் இது ஆபத்தானது என்று எச்சரித்தார்கள். இதற்கெல்லாம் பயந்தால் இன்று நான் ஒரு தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரராக மாறியிருக்க முடியாது. என் அப்பாவின் கனவை நிறைவேற்றியிருக்க முடியாது. நான் பெற்ற வெற்றிகளின் மூலம் உலகப் பயணம் மேற்கொண்ட வாய்ப்பையும் பெற்றிருக்க முடியாது. பிறருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் என் கதை மாறியிருக்க முடியாது. இன்று எல்லாமே எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது. ஒவ்வொரு அலை ஓசையும் வித்தியாசமானது. அலையின் ஓசையை முதலில் கவனித்துவிடுவேன். பிறகு அலையைத் தொட்ட உடனே அது எப்படி இருக்கும் என்பதை என்னால் கணித்துவிட முடியும். அதற்கு ஏற்றார்போல விளையாட ஆரம்பிப்பேன். எந்த வேலையைச் செய்தாலும் அதை நம்மால் செய்ய முடியும் என்று நாம் முதலில் நம்பவேண்டும். அப்படி நம்பினால் செய்ய இயலாத விஷயங்களைக் கூடச் செய்ய முடியும். நான் என்னை முழுமையாக நம்புகிறேன்” என்கிறார் டெரெக் ரெபெலோ.
இவரைச் சந்தித்த ஒரே வாரத்தில் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் மெட்லின் குன்னர்ட். 10 மாதக் காதலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. “அற்புதமான மனிதரை வாழ்க்கைத் துணைவராகப் பெற்றிருக்கிறேன். இவரது வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் என்றென்றும் துணையாக நிற்பேன்” என்கிறார் மெட்லின்.
அலை ஓசையைக் கணித்த அசாதாரண மனிதர்