தெளிகரையில் வழங்கப்பட்ட அரை நிரந்தர வீட்டுத் திட்டம் சரியான வகையில் இல்லை. அதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று வீட்டுத் திட்டப் பயனாளிகள் விசனம் தெரிவித்தனர்.
பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்ட தெளிகரையில் நிரந்தரக் காணிகள் இல்லாதிருந்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அரை நிரந்ததர வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. பிரதேச செயலகத்தால் காணிகள் வழங்கப்பட்டன.
அரச சார்பற்ற நிறுவனம் 1 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் தளபாடங்களை வழங்கியது.
கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை மாதாந்தம் தவணைப் பணமாக ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 1 லட்சம் ரூபா கடன் வழங்கியது.
இந்த வீடுகளில் இரு அறைகள் மட்டும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சமையலறையோ, விறாந்தையோ அமைக்கப்படாது அத்திபாரம் இடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
“சமைப்பதற்கு சமையலறை இல்லை. முன்பக்கத்தில் (விறாந்தை) கல் வைத்துக் கட்டப்பட வில்லை. மழை காலத்தில் மழைச் சாரல் வீட்டுக்குள் அடிக்கின்றது. சுவர்கள் பூசப்படவில்லை. அதனால் விச ஜந்துக்கள் சுவரால் ஏறி வீட்டுக்கு வரும் நிலையும் காணப்படுகின்றது. எமது காணிகளுக்குப் பின்புறம் காடு உள்ளதால் பாம்புகள் அதிகளவில் இங்கு நடமாடுகின்றன. முற்றத்தில் நிற்கும் மரங்களில் கூடப் பாம்புகள் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றன. எமது பிரச்சினைக ளுக்கான தீர்வை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும்.”- என்று வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவித்தனர்.
“2015ஆம் ஆண்டு கிடைத்த திட்டத்தின் அடிப்படையில் காணியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு அரை நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. அவர்களின் விருப்பத்துக்கு இணங்கவே வழங்கப்பட்டது. போதியளவு வீட்டுத் திட்டங்கள் எமக்குக் கிடைத்தால் அவற்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று பூநகரிப் பிரதேச செயலர் கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.