யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த, கொழும்பிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஏற்பாட்டில், இன்று (வியாழக்கிழமை) விசேட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 25 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸாரே இத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, கொலையுண்ட இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது நண்பன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும், பொலிஸ் தரப்பு இதனை மறுத்துள்ள நிலையில், மூன்று விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அத்தோடு, துப்பாக்கிதாரிகளின் இலக்கு பொலிஸாராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருவதால், பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இன்றைய தினம் கொழும்பிலிருந்து இந்த விசாரணைக் குழு சென்றுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியை பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.