தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு- கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தமிழ் மொழி பேசும் குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகளின் வழக்கை சிங்கள மொழிப் பாவனையில் உள்ள அனுதாரபுர நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு எதிராக கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிலைமையானது அவசரமாக கையாளப்பட வேண்டும் எனவும் குறித்த பிரேரணையின் மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.
அத்துடன், இக்கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆணித்தரமாக வலியுறுத்தப்படவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.