பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தனிப்பட்ட முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை.
அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டமைக்கு ஓர் பின்னணி அரசியல் பரிமாணம் இருக்கின்றது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.எனவே அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறமுடியாது.
இவ்வாறு நேற்று வலியுறுத்தினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நேற்றுச் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீது அவர் உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்கள். அன்று அவ்வாறான கிளர்ச்சி மேற்கொள்ளப்படுவதற்கு அரசியல் பரிமாணம் ஒன்று இருந்தது.
அந்த அரசியல் பரிமாணத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்பட்டது.
தற்போது நல்லிணக்கம் தொடர்பாகப் பேசப்படுகின்றது. பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் விடுவிப்பதானது அந்த நல்லிணக்கத்தின் அடிப்படையாக அமையும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் வழக்குகள் வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதற்குச் சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இவர்களின் வழக்குளை மாற்றாது சாட்சிகளுக்கு பாதுகாப்பினை வழங்கியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
வழக்குகள் திடீரென மாற்றப்பட்டுள்ளமையால் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
வழக்குகள் மாற்றப்பட்டுள்ள மூவர் தொடர்ச்சியாக உணவு ஒறுப்பை மேற்கொண்டுள்ளனர். வழக்குகள் மாற்றப்பட்டமையானது அரசமைப்புக்கும் முரணானது.
இந்த விடயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று அரசினால் கூறமுடியது. இந்த நாட்டில் மோதல் ஏற்பட்டமையால்தான் அவர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றார்கள்.
இந்த நபர்கள் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டமையால்தான் இவ்வாறு தடுப்புக்காவலில் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விடயம் தனியே சட்டப்பிரச்சினையல்ல அதனை அரசியல் ரீதியாகவே தீர்க்க வேண்டும். அரசு இந்த விடயத்தினை தீவிரமற்ற பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது.
அரசு அத்தகைய மனோநிலையில்தான் உள்ளது என்றே தமிழ் அரசியல் கைதிகளும் தமிழ் மக்களும் எண்ணுகின்றார்கள். அரசு இப்படிச் செயற்படுவதால் நாங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வருகின்றோம்.
வழக்குகள் மாற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசமைப்பின் மூலம் எந்தவொரு குடிமகனுக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமை மறுக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது- என்றார்.