சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து மஹிந்த அணியினரால் அண்மையில் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பலர் தாக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் சுமார் 25 பேர் கைதுசெய்யப்பட்டதோடு, பின்னர் இடம்பெற்ற பொலிஸ் விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதன் காரணமாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார். அத்தோடு கடந்த ஆட்சிக்காலத்தைப் போன்று, ஜனநாயக ரீதியில் இடம்பெறும் போராட்டங்களை அடக்குமுறைகளால் கட்டுப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆட்சியாளர்கள் குறிப்பிடுவதைப் போன்று நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.